Wednesday, October 28, 2009

பழைய பேப்பரை விற்று 6 வயது சிறுமிக்கு உயிர் கொடுத்த மாணவர்கள்


மதுரை : மதுரை வடமலையான் மருத்துவமனையின் "ஊர் கூடி உதவுவோம்' என்ற திட்டத்தின்கீழ், பழைய பேப்பரை சேகரித்து விற்று, அதில் கிடைத்த தொகையை 6 வயது சிறுமியின் ஆப்பரேஷனுக்கு கொடுத்து உயிரை காப்பாற்றினர் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்.


பொதுமக்களிடம் பழைய நாளிதழ்களை நன்கொடையாக பெற்று, அதில் கிடைக்கும் பணத்தை ஏழை குழந்தைகளின் மருத்துவச் செலவுக்கு பயன்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். இதுகுறித்து மாணவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் பயனாக, மதுரை டால்பின் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் 11 ஆயிரம் பழைய நாளிதழ்களை விற்று 47 ஆயிரம் ரூபாயும், பொதுமக்கள் 4,658 ரூபாயும் நன்கொடையாக அளித்தனர். இதைக் கொண்டு, பிறவியிலேயே இருதயத்தில் ஓட்டை இருந்த திண்டுக்கல் சிறுமி சித்ராவுக்கு அறுவை சிகிச்சையின்றி, கேத்லாப் முறை மூலம் இருதய ஓட்டை அடைக்கப்பட்டது. மொத்த செலவு 1.10 லட்சம் ரூபாயில், நன்கொடை போக, மீதமுள்ள தொகையை மருத்துவமனை நிர்வாகமே ஏற்றுக்கொண்டது.


ஆப்பரேஷன் செய்த டாக்டர் கண்ணனும் கட்டணம் பெறவில்லை. நிர்வாக இயக்குநர் டாக்டர் புகழகிரி கூறுகையில், ""ஒவ்வொரு துளி நீரும் சேர்ந்துதான் சமுத்திரத்தை உருவாக்குகிறது. அதுபோல் அனைவரும் இத்திட்டத்தில் பங்கேற்று இதனை வெற்றி பெற செய்ய வேண்டும்'' என்றார்.திட்டமேலாளர் ஹேமலட்சுமி, ரேடியோ மிர்ச்சி நிலைய இயக்குனர் தினேஷ், நிகழ்ச்சி இயக்குனர் ராதா உடனிருந்தனர்.

No comments: